ஆப்கானை சேர்ந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கும், வழக்கில் அவருக்கு சட்டப் போராட்டம் நடத்த உதவியாக இருந்த வழக்கறிஞருக்கும் காதல் ஏற்பட்டு திருணமணத்தில் முடிந்துள்ளது.
ஆப்கானை சேர்ந்தவர் ஈசானுல்லா. கடந்த 2016-ஆம் ஆண்டு முதுகலை கல்வி பயில சண்டீகர் வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த ஆப்கானை சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும், ஈசானுல்லாவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஈசானுல்லா, அந்த இளைஞரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனையடுத்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதமே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உள்ளூர் நீதிமன்றம், ஈசானுல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடினார் ஈசானுல்லா. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அத்துடன் தண்டனை காலம் முடிந்தவுடன் ஈசானுல்லா நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பான சட்டப் போராட்டத்தில் தான் ஈசானுல்லாவுக்கு சீக்கிய பெண் வழக்கறிஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. முதல்முதலாக சிறையில் சந்தித்துக் கொண்ட அவர்கள், அதன்பின் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர். காதல் தீவிரமானதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் ஈசானுல்லா சிறையில் இருக்கிறார். எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். இருவரும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடினர். இதனையடுத்து ஈசானுல்லாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு திருமணம் செய்துவிட்டு, ஈசானுல்லா மீண்டும் சிறைக்கே சென்றார்.
இந்நிலையில் ஈசானுல்லா மீண்டும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தினார். இதனையடுத்து போலீஸ் காவலில் ஈசானுல்லாவின் திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஈசானுல்லாவின் திருமணம் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளது.
இதனிடையே சிறை தண்டனைக்கு பின் ஈசானுல்லா, நாடு கடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவருடன் சேர்ந்த வாழ ஈசானுல்லாவின் மனைவி சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.