இந்தியா

மேல்நோக்கி பாய்ந்த அருவி.. என்ன காரணம் தெரியுமா? IFS அதிகாரியின் அடடே விளக்கம்!

JananiGovindhan

இந்தியாவின் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது என்பதை அண்மை நாட்களாக பெய்து வரும் மழையே உணர்த்திவிடும். அதுவும், மும்பை, கோவா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தொடர் மழையால் சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்கள் வாயிலாக காண முடிகிறது.

அந்த வகையில், மகாராஷ்டிராவின் மும்பை, புனே போன்ற இடங்களில் கொட்டித் தீர்த்து வரும் மழையால் ஒரு புறம் மக்கள் தத்தளித்து வந்தாலும், மறுபுறம் அதனை கொண்டாடித் தீர்க்கவும் செய்கிறார்கள்.

மலைவாசஸ்தலங்கள் என்றால் கொண்டாட்டத்துக்கு எல்லையே இருக்காது. அதன்படி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நானேகாட் பகுதியில் உள்ள அருவி ஒன்றில் அதீத காற்றால் மேல்நோக்கி நீர் வீசும் வீடியோ இணையவாசிகளுக்கு கண்கவர் காட்சியாக அமைந்திருக்கிறது.

இது தொடர்பாக ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்த அந்த ட்விட்டர் பதிவில், “புவி ஈர்ப்பு விசைக்கு நிகராக அதீத காற்று வீசும் போது இப்படியான நிகழ்வு நடைபெறும். பருவமழையின் பேரழகு இது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ மூன்று லட்சத்துக்கும் அதிகமானோரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது.