பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற சிறப்பு அமர்வையும், பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பதிவில், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சிம்லா ஒப்பந்தத்தை நாம் கைவிட்டு விட்டோமா எனவும், இருநாடுகளிடையே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய நாம் கதவுகளை திறந்துள்ளோமா எனவும் அவர் வினவியுள்ளார். பாகிஸ்தானுடனான தூதரக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதா எனவும், பாகிஸ்தானிடமிருந்து என்னென்ன உறுதிகள் பெறப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் அவர் தனது மற்றொரு பதிவில், 1971 ஆம் ஆண்டு போர் தொடர்பாக, அமெரிக்க அதிபருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி துணிந்து எழுதிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், தற்போது போல் அன்றைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா அனுமதிக்கவில்லை எனவும், அதன்பின்னர் நான்கே நாட்களில் பாகிஸ்தான் சரணடைந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.