தனது அம்மாவின் அறிவுரைக்கிணங்க குடியை விட்டுவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்பி பக்வந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதி எம்பி பக்வந்த் மான். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். இவர் தனது தாயின் அறிவுரையை கேட்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாக கூறியுள்ளார். இவரின் இந்த முடிவுக்கு காரணம் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனமும், தாயின் அறிவுரையுமே என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம் பர்னாலா பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பக்வந்த் மான், “ எதிர்க்கட்சியினர் எப்போதுமே என்னை மது அருந்துபவன் என்று விமர்சனம் செய்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் காலை மாலை என எல்லா வேளையிலும் நான் போதையிலேயே இருப்பவன் எனக் கூறி வந்தனர். இதுதொடர்பான பழைய வீடியோக் காட்சிகளை நான் பார்க்கும்போதெல்லாம் என் மனம் நொந்துபோனது. எதிர்க்கட்சிகள் என்னை இப்படி விமர்சிப்பதை கேட்ட என் தாய், என்னை குடிக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் குடியை விட்டுவிட்டேன்.” எனக் கூறியுள்ளார்.
பக்வந்த் மான் எம்.பியின் செயலலை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். பஞ்சாப் மற்றும் நாட்டு மக்களுக்காக பக்வந்த் மான் மிகப்பெரும் தியாகம் செய்திருப்பதாக கூறியுள்ள கெஜ்ரிவால், இது சிறிய விஷயம் அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பக்வந்த் மான் தற்போது என்னுடைய இதயத்தை வென்றுவிட்டார். என் இதயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த பஞ்சாப் மக்களின் இதயத்தையுமே அவர் வென்றுவிட்டார். ஒரு தலைவர் என்பவர் மக்களுக்காக எதனையும் தியாகம் செய்யும் பக்வந்த் மான் போல இருக்க வேண்டும். பகவந்த் மானின் செயல் சாதாரணமான விஷயம் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர பஞ்சாப்பில் 13 மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.