இந்தியா

4 வயது குழந்தைக்கு தாய், ஆனால் ஐஏஎஸ் தேர்வில் சாதனை

4 வயது குழந்தைக்கு தாய், ஆனால் ஐஏஎஸ் தேர்வில் சாதனை

rajakannan

நான்கு வயது குழந்தையை பார்த்துக் கொண்டே அரியானாவை சேர்ந்த பெண் ஐஏஎஸ் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தவர் அனு குமாரி. முதல் மதிப்பெண் எடுத்த அனுதீப்பை போல், அனு குமாரியும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் படித்தவர். தன்னுடைய குழந்தை மீது அதிக பாசம் கொண்டு அனு குமாரி, குடும்ப பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டு தினமும் 10 முதல் 12 மணி நேரம் படித்துள்ளார். அனு குமாரி டெல்லி பல்கலைக் கழகத்தில் இயற்பியல் படித்தவர். அதேபோல் நாக்பூர் ஐஎம்டியில் எம்.பி.ஏயும் படித்தார். 

தன்னுடைய வெற்றிப் பயணம் குறித்த பல்வேறு அனுபவங்களை அனு குமாரி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, “வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் வெற்றி பெற உறுதியான விருப்பம் வேண்டும். அதனை செய்ய உங்களால் முடியுமானால், உங்களுடைய வெற்றியை எதனாலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.

நான் தேர்வுக்காக என்னுடைய கிராமத்தில் தான் படித்தேன். என்னுடைய கிராமத்தில் செய்திதாள் வசதி கூட இல்லை என்று கூறிய அவர், ஐஏஎஸ் அதிகாரி ஆன பின்னர் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என்றார். 

2017ம் ஆண்டிற்கான ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 240 பெண்கள் உட்பட 990 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 8 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.