இந்தியா

ஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்

ஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்

webteam

ஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக கடும் முன்னேற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அம்மாநில முதலமைச்சராக பாஜகவின் மனோகர் லால் கட்டர் இருந்து வருகிறார். இவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளார். இது தொடர்பாக இவர் ஹரியானா மாநிலத்திலுள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹெச்.எஸ்.பல்லாவை சந்தித்தார். 

இதனைத் தொடர்ந்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஓய்வு பெற்ற நீதிபதி ஹெச்.எஸ்.பல்லா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். அவர் என்னிடம் ஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேட்டை அறிமுகபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார். நான் அதனை ஹரியானாவில் அமல்படுத்தலாம் என்று அவரிடம் நான் உறுதியளித்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்திலும் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளதால் குடிமக்கள் பதிவேடு மீண்டும் பாஜக ஆட்சிக்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.