இந்தியா

ஷேர் ஆட்டோவில் சில்மிஷ போலீஸ்: விளாசித் தள்ளினார் கராத்தே சாம்பியன்!

ஷேர் ஆட்டோவில் சில்மிஷ போலீஸ்: விளாசித் தள்ளினார் கராத்தே சாம்பியன்!

webteam

ஷேர் ஆட்டோவில் சென்ற பெண் கராத்தே சாம்பியனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஹரியானாவில் உள்ள ரோட்டாக்கைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜாங்ரா. இவர் மகள் நேகா. கடந்த வருடம் கோவாவில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு, கராத்தே அகாடமிக்கு பயிற்சிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். வழக்கம்போல அன்றும் ஷேர் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரத்துக்குப் பின் போலீஸ் யூனிபார்மில் இருந்த இன்னொருவரும் ஆட்டோவில் ஏறினார். அவர் சட்டையில் யாஷின் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. ஆட்டோவில் வேறு யாரும் இல்லை. 

டிரைவர், வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு ஏதோ வாங்கிவிட்டு வர கடைக்குச் சென்றார். நேகா, தனியாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, அவரைத் தொட்டுள்ளார் போலீஸ்காரர். பிறகு சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார். ’போலீஸ் யூனிபார்மில் இருந்து கொண்டு இப்படி செய்கிறீர்களே’ என்று திட்டியுள்ளார் நேகா. ஆட்டோ டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். இப்போதும் சில்மிஷத்தைத் தொடர்ந்த அந்த போலீஸ்காரர், ஃபோன் நம்பரை கேட்டு நச்சரித்துள்ளார். ’சும்மா ஃபிரெண்டா இருக்கலாம்னுதான் கேட்கிறேன்’ என்று பல்லைக் காட்டியுள்ளார்.

பொறுமை இழந்த நேகா, தனது கராத்தே பன்ச் ஒன்றை விட்டார் போலீசுக்கு. பிறகு நான்கைந்து முறை அடிக்கத் தொடங்கியதும் வலி தாங்காமல் வண்டியில் இருந்து குதித்து தப்பியோட முயன்றார். விடவில்லை நேகா. டிரைவர், வண்டியை நிறுத்தினார். போலீஸ்காரரை ஓங்கி ஒரு மிதி மிதித்து வண்டிக்குள் ஓரமாகத் தள்ளினார் நேகா. பின்னர் டிரைவரிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விடச் சொன்னார். போனார் டிரைவர்.

போலீஸ் ஸ்டேஷனில் சம்பவத்தைச் சொன்னார் நேகா. அங்குள்ள பெண் போலீஸ், ’எப்ஐஆர் போட்டால், அவருக்கு வேலை போய்விடும். அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று சமாதானம் பேசியுள்ளனர். இதுபற்றி பெற்றோரிடம் தகவல் சொன்னார் நேகா. அவர்கள் ஸ்டேஷனுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அதற்குள் வாட்ஸ் அப்பில் பரவிவிட்டது. இதையடுத்து அந்த போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்துள்ளது ஹரியானா போலீஸ்.