செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
ஹரியானா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த ரிஷப் கௌஷிக் என்பவர் Zomato-வில் உணவு ஆர்டர் செய்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் உணவு வந்து சேரவில்லை. இதனால், உணவு எங்கே இருக்கிறது என்பதை அறிய Zomato செயலியில் உள்ள ஆர்டர் tracker-ஐப் பார்த்துள்ளார். அப்போது, உணவு டெலிவரி செய்ய வேண்டிய நபர் ஒரே இடத்தில் சுமார் 40 நிமிடங்களாக இருப்பது தெரியவந்தது. ரிஷப், டெலிவரி ஏன் தாமதமாகிறது என்பதை தெரிந்துகொள்ள, டெலிவரி நபர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த டெலிவரி நபர், உணவை வேறு 2 பேருக்கு ரூ.100-க்கு விற்றது ரிஷபுக்கு தெரியவந்தது. இதைப் பார்த்த ரிஷப், அந்த 2 பேரையும் புகைப்படம் எடுத்தார். அவர்கள் ஏற்கெனவே அந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பாதி சாப்பிட்ட நிலையில் இருந்த உணவுப் பொட்டலங்களை ரிஷப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தை பற்றியும் அந்த புகைப்படங்களையும் அவர் X தளத்தில் பகிர்ந்தார்.
மேலும், Zomato செயலியில் உள்ள ஆர்டர் tracker-ன் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். அதில், டெலிவரி நபர் ஒரே இடத்தில் இருப்பதும், உணவு டெலிவரி செய்யப்படாமல் இருந்தபோதும் ஆர்டர் தொடர்ந்து டெலிவரி நிலையில் இருப்பதும் தெரிந்தது. இந்த சம்பவத்தை Zomato நிறுவனர் தீபிந்தர் கோயலையும் குறிப்பிட்டு ரிஷப் விமர்சித்தார். 'இது இனி உணவு டெலிவரி இல்லை. முழுமையான உணவு பகிர்வு பொருளாதாரமாகிவிட்டது' என்று அவர் கிண்டலாக பதிவிட்டார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு Zomato Care பதிலளித்து, சம்பவம் குறித்து விசாரிக்க ஆர்டர் ஐடியை பகிருமாறு ரிஷப்பிடம் கேட்டுக்கொண்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு நேர உணவு டெலிவரி தொடர்பாக பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, Cash on Delivery முறையைப் பயன்படுத்தலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.