கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகட், உடனடியாக மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர், தாயகம் திரும்பிய அவர், தான் வகித்துவந்த ரயில்வே வேலையையும் ராஜினாமா செய்தார். அதன்பிறகு, காங்கிரஸில் இணைந்த அவர், அக்கட்சி சார்பில் நடைபெற்று முடிந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, "வினேஷ் போகத் இந்த பிரச்னையை சட்டமன்றத்தில் எழுப்பினார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது குரூப் A வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.