இந்தியா

‘கட்சி ஆரம்பித்து 319 நாட்களில் கிங்மேக்கர்’ - அதிரடி காட்டும் துஷ்யந்த் சவுதாலா

rajakannan

ஹரியானா மாநிலத்தில் தங்கள் உதவியுடன் தான் ஆட்சி அமையும் என்று ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதலா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி 165 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 96 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதனால், பாஜக கூட்டணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 9.30 மணி நிலவரப்படி பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு இடங்களை பிடிக்கவில்லை. ஆனால், ஜனநாயக ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

90 இடங்களை கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் பாஜக காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், நிச்சயம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, 10க்கும்  மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கராக இருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஹரியானாவில் புதிய ஆட்சி அமைப்பதில் தங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போவதில்லை. அதனால், ஜனநாயக ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

இந்திய தேசிய லோக் தள் கட்சியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அஜய் சிங் சவுதாலா மற்றும் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் ஜனநாயக ஜனதா என்ற புதிய கட்சியை உருவாக்கினர். கட்சி ஆரம்பித்து இன்னும் ஓராண்டு கூட முழுவதுமாக முடிவடையவில்லை. ஆனால், அந்த கட்சி ஆட்சியை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா பார்க்கப்படுகிறார்.