இந்தியா

நிலையான ஆட்சி தருபவர்களுக்கே எங்கள் ஆதரவு - துஷ்யந்த்

webteam

ஹரியானாவில் நிலையான ஆட்சியை யார் தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்களின் ஆதரவு என்று ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்படுவதால் எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஹரியானாவில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற இழுபறி நீடித்து வருகிறது. 

இந்நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று டெல்லியல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்களுடைய கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக எம்.எல்.ஏக்கள் என்னை தேர்வு செய்துள்ளார்கள். நாங்கள் ஹரியானா மக்களின் முன்னேற்றத்திற்கு எப்போதும் துணை நிற்போம். எந்த கட்சி ஹரியானாவில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75 சதவிகிதம் முன்னுரிமை தருகிறதோ அந்தக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். 

அத்துடன் எந்தக் கட்சி ஹரியானாவில் நிலையான ஆட்சியை தருகிறதோ அந்தக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். எங்களை பொருத்தவரை இரண்டு கட்சியும் தீண்டதகாதது அல்ல. இவர்களில் யாரை வேண்டுமானாலும் நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். எனினும் ஹரியானா மாநிலத்தில் பாஜக சுயேட்சைகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.