இந்தியா

உத்தராகண்ட் மாநிலத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

கலிலுல்லா

உத்தரகாண்ட் மாநிலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்த ஹரக் சிங் ரவாத் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது உத்தராகண்ட் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.

ஹரக் சிங் ரவாத் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். கடந்த ஐந்து வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு மிக்க அமைச்சராக திகழ்ந்த ஹரக் சிங் ரவாத், தனது குடும்பத்தினருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் அதை பாரதிய ஜனதா கட்சி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினரான பிரீதம் சிங்கை சந்தித்து பேசியதாகவும் பாரதிய ஜனதா தலைமைக்கு தகவல் கிடைத்தது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் தொடர் ஆலோசனைக்குப் பிறகு, ஹரக் சிங் ரவாத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் ஆறு வருடங்களுக்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் ஹரிஷ் ராவத் முன்னிலையில் விரைவில் ஹரக் சிங் ரவாத் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார் என உத்தராகண்ட் மாநில அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உத்தராகண்ட்டில் 2017ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த வருடம் முதலமைச்சர் பதவியில் இருந்து திரிவேந்திர சிங் ராவத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீரத் சிங் ரவாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் தீபக் சிங் ரவாத் சட்டமன்ற உறுப்பினர் அல்ல என்பதாலும் அவரை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்க அந்த சமயத்தில் வாய்ப்பு இல்லை என்பதாலும் புஷ்கர் சிங் தாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

இப்படி அடுத்தடுத்து முதல்வர்கள் மாற்றப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஹரக் சிங் ரவாத் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.