உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் அனுஷ்கா திவாரி. இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் எனும் மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி 39 வயதான வினீத் துபே முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால், துபே உயிரிழந்துவிட்டதாகவும் வினீத்தின் மனைவி ஜெயா முதலமைச்சர் பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயா கொடுத்துள்ள புகாரில், “எனது கணவர் கடந்த மார்ச் 13ம் தேதி எம்பையர் கிளீனிக்கில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மறுநாளே முகம் வீங்கி கடுமையான வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மறுநாளே உயிரிழந்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துபேயின் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தநிலையில், குஷாக்ரா கட்டியார் என்பவர் தாமாக முன்வந்து காவல் ஆணையர் அகில் குமாரிடம் மருத்துவமனைமீது புகார் அளித்தார். தனது சகோதரரும் மென்பொருள் பொறியாளருமான மாயங்கிற்கும் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி எம்பயர் மருத்துவமனையில் தலைமுடி மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவருக்கு மார்பு வலி மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்டநிலையில் மறுநாளே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், "முடி மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள பயிற்சி பெறாத நபர்களை அவர்கள் பணியமர்த்தியதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டநிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.
திவாரி மற்றும் திரிபாதி இருவரும் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த பயிற்சியும் படிப்பும் இல்லாமல், மருத்துவர்களின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பறிப்போயிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.