டெல்லி அருகே பெண்கள் திடீரென மயக்கம் அடைவதும் அவர்களின் தலை முடி துண்டிக்கப்படுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், டெல்லி, ஹரியானா மாநில கிராமங்களில் பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படும் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தின. பின், ராஜஸ்தான், உ.பி., மாநிலங்களிலும் பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு கூந்தல் நறுக் வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரியில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுமி ஒருவரின் தலைமுடியை சிலர் வெட்டியுள்ளனர். திடீரென்று உடையில் முடிகள் கிடந்ததை அடுத்து தலைமுடியை தடவிய சிறுமிக்கு அதிர்ச்சி. இதை யார் செய்தது என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை கமிஷனர் ஒரு போலீஸ் டீமை அனுப்பி விசாரிக்கச் சொன்னார். அந்தச் சிறுமியின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவளது 10 வயது சகோதரனும் எதிர்வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவனும் சேர்ந்து அவள் தலைமுடியை விளையாட்டுக்காக வெட்டியது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அந்த சேட்டைக்கார சிறுவர்களை எச்சரித்து வழக்கை முடித்தனர். ஆனால் மற்றப் பகுதிகளில் கூந்தலை வெட்டும் நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.