இந்தியா

டெல்லியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: கார்கள், வீடுகள் கடும் சேதம்!

ச. முத்துகிருஷ்ணன்

டெல்லியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்ததில் கார்கள், வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 16 டிகிரி அளவிற்கு வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில், இன்று மாலை 4:20 மணியளவில் வானம் திடீரென இருளில் மூழ்கி ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்தது. பனிக்கட்டிகள், கண்ணாடிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததால் டெல்லியின் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் மற்றும் தெற்கு டெல்லியின் சஃப்தர்ஜங்கில் 16 டிகிரி செல்சியஸ் குறைந்தும் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங்கில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில் திடீர் கனமழையால் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்தது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பல இடங்களில் வேரோடு சாய்ந்துள்ளன. பல பொருட்கள் தூக்கி வீசப்பட்டத்தில் கார்கள் சேதமடைந்த காட்சிகளை டெல்லி குடியிருப்பாளர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். ஹேமந்த் ரஜவுரா என்ற நபர் பெரிய உலோகப் பொருளால் துளைக்கப்பட்ட சிவப்பு காரின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பல்லவி பிரதாப்பும் ஆலங்கட்டி மழையின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.