இந்தியா

டிராய் தலைவரின் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் 1 ரூபாய் டெபாசிட் !

டிராய் தலைவரின் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் 1 ரூபாய் டெபாசிட் !

Rasus

டிராய் தலைவரின் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் 1 ரூபாயை டெபாசிட் செய்ததோடு அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்தும் பதிவிட்டுள்ளனர்.

டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என கூறி அதனை ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் இதன் மூலம் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா..? என்றும் சவால் விட்டார்.

ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி சிலவற்றை பதிவிட்டார். செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டார். எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு அந்த நபர் பதில் அளித்திருந்தார். ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில் ஆதார் குறித்து சவாலை வெளியிட்டது சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில்தான் என்றும் டிராய் அமைப்பின் தலைவர் என்ற முறையில் அல்ல என்றும் ஆர்.எஸ்.ஷர்மா தனது ட்விட்டர் பதிவில் விளக்கியிருந்தார். இந்நிலையில் டிராய் தலைவரின் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் 1 ரூபாயை டெபாசிட் செய்ததோடு அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்தும் பதிவிட்டுள்ளனர். ஆர்.எஸ்.ஷர்மாவின் ஆதார் எண் கிடைத்ததால் அதன் மூலம் வங்கிக் கணக்கு சம்பந்தமான தகவல்களை தெரிந்து கொண்ட ஹேக்கர்கள் BHIM, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி அவருக்கு 1 ரூபாயை அனுப்பியுள்ளனர். ஆதார் எண் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது என அரசு வாதிட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு மீண்டும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.