இந்தியா

“கிங்மேக்கர் அல்ல கிங் தான்” குமாரசாமி

“கிங்மேக்கர் அல்ல கிங் தான்” குமாரசாமி

webteam

கர்நாடக மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலத் தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்கிறார்.

கர்நாடகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிக்கு தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாஜகவுக்கு 104இடங்களிலும், காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும்‌ ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர். பாஜவை சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸின் மனுவை நள்ளிரவில் விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது வழக்கை ஒத்திவைத்தது. ஆளுநர் அழைப்பின்படி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது சில முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில வழிமுறைகளை நீதிமன்றம் கூறியது. கடந்த 19ஆம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, குமாரசாமியை ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்தார். 

கர்நாடக மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலத் தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்கிறார்.மாநில துணை‌ முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள பரமேஸ்வரா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி சிவக்குமாருக்கு அளிக்கப்படுகிறது. இதற்கிடையே பதவியேற்பு விழாவை பாரதிய ஜனத‌வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக நடத்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆகியோர் பங்கேற்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பதவி ஏற்பில் பங்கேற்கின்றனர். அதே போல ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ், ராஷ்ட்ரிய லோக் தள் நிறுவனர் அஜித் சிங், உள்ளிட்டோரும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளிவந்துள்ளது.