காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பேரம் பேசியதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் குமாரசாமி, ராம்நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஜம்கண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ராம்நகர் தொகுதியில் குமாரசாமி மனைவி அனிதாவும் ஜம்கண்டி தொகுதியில் ஆனந்த் சித்து யமகவுடாவும் போட்டியிட்டனர்.
கடந்த நவம்பர் 3ம் தேதி ஷிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளும் தேர்தல் நடைபெற்றது.
ராம்நகர், ஜம்கண்டி ஆகிய இருதேர்தல்களின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அறிவிப்புகள் வெளியாகின. அனிதா குமாரசாமி, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்திலும் ஆனந்த் சித்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.
நடைபெற்ற 5 தொகுதி இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக ரூ. 25 - 30 கோடி பேரம் பேசியதாகவும் ஆனால் யாரும் அவர்கள் பக்கம் போகவில்லை எனவும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.