டெல்லி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கணவன் - மனைவி இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியை அடுத்த குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் கால் செண்டர் நிறுவனத்தில் 7 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி. வேலை வாங்கித் தருவதாக கூறி நண்பர் அபினப் என்பவரிடம், விக்ரம் ரூ1.5 லட்சம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேலை வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், விக்ரம் வீட்டிற்கு அபினப் நேற்று வந்துள்ளார். பண விவகாரம் தொடர்பாக அபினவ் மற்றும் விக்ரம் இடையே நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அபினப் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்ரமை குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது மனைவி ஜோதியையும் குத்தியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்கவே அருகில் இருந்தவர்கள் விக்ரம் வீட்டிற்கு வந்து பார்த்தனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே வீழ்ந்துகிடந்தனர். கத்தி குத்தில் ஈடுபட்ட அபினவை பக்கத்து வீட்டினர் போலீசில் பிடித்துக் கொடுத்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபினவ் மற்றும் விக்ரம் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் மற்றும் ஜோதி தம்பதி கத்தியால் குத்தப்பட்ட போது அதனை அவர்களது 7 வயது மகன் நேரில் பார்த்துள்ளார்.