இந்தியா

மோடியால் பாராட்டப்பட்டவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்

மோடியால் பாராட்டப்பட்டவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்

webteam

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர். பாஜகவின் மூத்த தலைவர்களும் குர்மீத் ராமும் பரஸ்பரம் ஆதரவுடனேயே இருந்து வந்திருக்கின்றனர்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மிகப்பெரும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வன்முறைக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறையை தான் கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறிய மோடி, அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சட்டம் ஒழுங்கு நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் உள்துறை செயலாளரிடமும் தான் தொடர்பு கொண்டு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதமர் மோடி இதற்கு முன்பு குர்மீத் ராம் ரஹீமுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். 2014ல் ஸ்வட்ச் பாரத் திட்டத்தை குர்மீத் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக அவர் பாராட்டியுள்ளார். 2014 அக்டோபர் 29ம் தேதியன்று மோடி தனது ட்விட்டர் பதிவில் "பாபா ராம் ரஹீம் ஜீ மற்றும் அவரது குழுவினர் ஸ்வட்ச் பாரத் திட்டத்துடன் இணையுமாறு நாடு முழுவதிலுமுள்ள மக்களை ஊக்கப்படுத்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் 2014 ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது குர்மீத் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த ஆண்டு மே மாதத்தில் ஹரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டார், தனது தொகுதியான கர்னாலில் குர்மீத்துடன் சேர்ந்து சிறப்பு தூய்மைத் திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்தார்.

இது தவிர ஹரியானா கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா கடந்த வாரம் குர்மீத் பற்றிக் கூறுகையில், குர்மீத்தின் தேரா சச்சா அமைப்பினர் அமைதியை விரும்பக் கூடியவர்கள் எனத் தெரிவித்திருந்தார். ஒரு சில மாதங்களுக்கு முன் அவர் ரூ.51 லட்சத்திற்கான காசோலையை குர்மீத்துக்கு நன்கொடையாக அளித்தார். இதே போல் ஹரியானா சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

இதே போல் கடந்த ஆண்டு டெல்லியில் தூய்மை இந்தியா திட்டத்தை குர்மீத்தின் தேரா சச்சா அமைப்பினரும் பாஜகவும் இணைந்து மேற்கொண்டன. இந்தியா கேட் பகுதியில் நடந்த தூய்மைத் திட்ட தொடக்க விழாவில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.