பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரியானா நீதிபதியின் மகனும் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த். இவர் மனைவி ரீத்து (38), மகன் துருவ் (18). நீதிபதி கிருஷ்ணனின் பாதுகாப்பு அதிகாரியாக மஹிபால் சிங் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே ரீத்து மற்றும் துருவ் கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டுக்குச் சென்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக மஹிபால் சிங் சென்றிருக்கிறார்.
அனைத்து பொருட்களையும் வாங்கிய பின் வீடு திரும்பியபோது யாரும் எதிர்பாராதவிதமாக மஹிபால் சிங், ரீத்துவை, துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர்களது மகன் துருவையும் சுட்டார் மஹிபால். இதில் பலத்த காயமடைந்தவர்கள், இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் மஹிபால் கார் மூலம் தப்பிச் சென்றுவிட்டார்.
Read Also -> வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு வினோத தண்டனை!
இதை நீதிபதிக்கு போன் செய்து சொன்ன மஹிபால், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துருவின் உடல்நிலையும் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
(மஹிபால் சிங்)
அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கடந்த 15 ஆம் தேதி மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.