model image meta ai
இந்தியா

இமாச்சல்| பாராகிளைடர் விபத்தில் குஜராத் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

அகமதாபாத்தைச் சேர்ந்த 25 வயது சுற்றுலாப் பயணி ஒருவர், பாராகிளைடர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

Prakash J

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ராஜேஷ் பாய். 25 வயது நிறைந்த சுற்றுலாப் பயணியான இவர், இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள இந்த்ருநாக் பாராகிளைடிங் தளத்தில் இருந்து பாராகிளைடர் மூலம் பறந்துள்ளார். இவருடன் பைலட் சூரஜும் இருந்துள்ளார். இந்த நிலையில், புறப்படும்போது கிளைடர் காற்றில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ், முதலில் தர்மசாலா மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தாண்டா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். சூரஜ் காங்க்ராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சதீஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூடுதல் எஸ்பி லகன்பால் தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களில் இந்த்ருநாக்கில் நடந்த இரண்டாவது பாராகிளைடிங் விபத்து இதுவாகும். ஜனவரியில், குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயது பாவ்சர் குஷி, தனது கிளைடர் விபத்துக்குள்ளானதில் புறப்படும்போது இறந்தார். அவரது விமானியும் விபத்தில் காயமடைந்தார். இரண்டு நிகழ்வுகளிலும் பாராகிளைடிங் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூடுதல் எஸ்பி லகன்பால் தெரிவித்தார். இதற்கிடையே, காங்க்ரா துணை ஆணையர் ஹைம்ராஜ் பைர்வா, மழைக்கால பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, செப்டம்பர் 15ஆம் தேதி வரை பிரபலமான பிர் பில்லிங் தளம் உட்பட மாவட்டம் முழுவதும் பாராகிளைடிங் செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.