இந்தியா

போலி பாஸ்போர்ட் மூலம் 3 நாடுகளுக்கு பயணம் - குஜராத் இளைஞர் கைது

JustinDurai

போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி போர்ச்சுகல், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த முஜிப் ஹுசைன் காசி.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தைச் சேர்ந்த முஜிப் ஹுசைன் காசி (32) என்பவர் கடந்த 5 ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் மூலம் 3 நாடுகளுக்கு பயணம் செய்ததாக மும்பையில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சஹார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''முஜிப் ஹுசைன் காசி 2018இல் போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று அங்குள்ள ஒரு ஏஜென்ட் மூலம் போலி பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார். இந்த போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவர் இந்திய நுழைவு விசாவைப் பெற்று இந்தியா வந்துள்ளார். இங்கிருந்து மூன்று முறை போர்ச்சுகலுக்கு நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். மேலும் அதே போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி போர்ச்சுகலில் இருந்து பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். அவர் கடைசியாக புதன்கிழமை பாரிஸிலிருந்து புறப்பட்டு தோஹா வழியாக மும்பைக்கு வந்துள்ளார். இங்கே அவரை கைது செய்தோம்'' என்றார்.

புதன்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய முஜிப் ஹுசைன் காசியின் பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு எதிராக போர்ச்சுகல் அரசு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவருடைய பயண வரலாறுகளை சரிபார்த்தபோது, 2019, 2020, 2022ஆம் ஆண்டுகளில் இந்த போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி 3 நாடுகளுக்கு பயணம் செய்தததை கண்டறிந்தனர். மேலும், கடந்த 2010ஆம் ஆண்டு மாணவர் விசாவில் இங்கிலாந்துக்கு சென்ற அவர், விசா காலாவதியான பின்னரும்கூட நீண்ட காலம் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி முஜிப் ஹுசைன் காசி பயணம் செய்த தகவலை போர்ச்சுகல், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தூதரகம் மூலம் தெரியப்படுத்த இமிகிரேஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் முஜிப் ஹுசைன் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.