இந்தியா

சிகிச்சை என்ற பெயரில் தலைகீழாக கட்டி அடி, உதை.. அந்தரங்க உறுப்பில் - குஜராத்தில் கொடூரம்

Sinekadhara

குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சென்ற நபர் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தேசிய நோய் ஆக குடிப்பழக்கம்

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போவது இன்று தேசிய அளவிலான ஒரு பிரச்னையாகவே மாறிவிட்டது. குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள். இதனால், குடிப்பழக்கத்தில் இருக்கும் பலரும் அதில் இருந்து மீள குடிபோதை மீட்பு மையங்களை நாடி செல்கின்றனர். தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையில் மையங்களுக்கு சென்றால் அங்கு அத்துமீறி வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியாக உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

தலைகீழாக பிடித்து சரமாரியாக அடி, உதை

குஜராத் மாநிலம் மேசானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் சுதார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவரை படான் மாவட்டத்திலுள்ள ஜியோனா மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். பிப்ரவரி 17ஆம் தேதி கழிவறைக்குச் சென்ற சுதார் அங்கு தனது மணிக்கட்டை அறுக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த மறுவாழ்வு மையத்தின் மேனேஜர் சந்தீப் பட்டேல் மற்றும் மற்ற 7 பேர், சுதாரை வெளியே கூட்டிவந்து அவருடைய கை மற்றும் கால்களை கட்டி, தலைகீழாக பிடித்து பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

அந்தரங்க உறுப்பில்.. 

அதையும் மீறி அங்கிருந்த இருவர் பிளாஸ்டிக் பைப்பை உருக்கி சுதாரின் அந்தரங்க பகுதியில் ஊற்றியுள்ளனர். மேலும், வேறு யாரேனு தவறு இழைத்தால் இதுபோன்றே தண்டிக்கப்படுவர் என்றும் மேனேஜர் பட்டேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 2 மணிநேரம் அடித்து தாக்கியதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இயற்கை மரணமா?

இதனையடுத்து அவர் இயற்கை மரணம் எய்தியதாகக் கூறி அவருடைய உடலை தகனம் செய்திருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பி- டிவிஷன் காவல்நிலைய ஆய்வாளர் மேஹுல் பட்டேல், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான சந்தீப் பட்டேலை தேடிவருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.. https://twitter.com/sirajnoorani/status/1634271828180082696