ஆனந்த் அம்பானி - ராதிகா
ஆனந்த் அம்பானி - ராதிகா ட்விட்டர்
இந்தியா

குஜராத் ஜாம்நகர் ஏர்போர்ட்க்கு சர்வதேச அந்தஸ்து.. முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தால் எழுந்த எதிர்ப்பு!

PT WEB

முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணம் - களைகட்டிய ஜாம்நகர்:

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி துறை தவிர பிற வணிகங்களிலும் இயக்குநராக உள்ளார். இவருக்கும், தொழிலதிபரும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மணப்பெண்ணான ராதிகா, ஆனந்த் அம்பானியுடன் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்களுடைய திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் குஜராத்தின் ஜாம் நகரில் களைகட்டி வருகின்றன. இதையடுத்து, மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை திருமணத்திற்கு முந்தைய விருந்து உபச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை: பிரபலங்கள் வருகை!

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர். குறிப்பாக நேற்று தொடங்கிய இந்த நிகவில், மைக்ரோசாப்ட நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சிஇஓ பாப் இகர், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராணி முகர்ஜி, ராம் சரண், அட்லீ எனப் பலரும் பங்கேற்றனர். இதுதவிர, இன்னும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் வர ஏதுவாக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் அந்த விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தவிர ஜாம்நகரில் கஸ்டம் துறை, குடிவரவு உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளை செய்யவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சர்வதேச அந்தஸ்து: எம்.பி. சு. வெங்கடேசன் விமர்சனம்

இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டுச் செல்ல முடியும். வழக்கமாக அங்கே தினசரி 6 விமானங்கள்தான் வந்து செல்லும். ஆனால், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் காரணமாக நேற்று 100+ விமானங்கள் வந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, அம்பானி வீட்டு திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருப்பதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மதுரை எம்பி வெங்கடேசன், ’மோடி அரசின் மெகா மொய், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து. 6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமானச் சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலைய கோரிக்கை மட்டும் இன்றுவரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள்தான் இவர்கள்’ என அதில் பதிவிட்டுள்ளார்.