இந்தியா

நாடாளுமன்ற கட்டட புனரமைப்பு பணி - குஜராத் நிறுவனம் தேர்வு

webteam

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைக்க குஜராத்தை சேர்ந்த கட்டட கலை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டட வடிவமைப்பாளர்கள் சர் எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர் ஹெர்பெர்ட் பெக்கர் ஆகிய இருவர்களின் திட்டத்தின் படி கட்டப்பட்டது. இதனை அப்போதைய வைசிராய் லார்ட் இர்வின் திருந்துவைத்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்தக் கட்டடம் இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது. இதனையடுத்து, நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வரும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடம் மற்றும் ராஜபாதை ஆகியவற்றை புனரமைக்கும் ஒப்பந்தத்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹெச்.சி.பி கட்டடக் கலை நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “நாடாளுமன்றம், ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்தா ஆகியவற்றை புனரமைக்க ஹெச்.சி.பி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

ஹெச்.சி.பி நிறுவனம் ஏற்கனவே சபர்மதி ஆற்றுங்கரையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த நிறுவனம் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.