gujarat accident x page
இந்தியா

குஜராத் | நண்பருடன் மின்னல் வேகத்தில் கார் பந்தயம்.. போலீஸ் அதிகாரியின் மகனால் பறிபோன 2 உயிர்கள்!

குஜராத்தில் போலீஸ்காரரின் மகன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Prakash J

குஜராத்தின் பாவ்நகரில் போலீஸ்காரர் ஒருவரின் மகனும், அவரது நண்பரும் கார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இந்த வார தொடக்கத்தில் போலீஸ்காரரின் மகன் வெள்ளை நிற கிரெட்டா காரையும், அவரது நண்பர் சிவப்பு நிற பிரெஸ்ஸா காரையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.

மாலை 4 மணியளவில் கலியாபீட் பகுதியில் உள்ள நெரிசலான தெருவில் அந்த கார்கள் வேகமாகச் சென்றுள்ளன. இதில் வெள்ளை நிற கிரெட்டா கார், 120-150 கிமீ வேகத்தில் சென்றுள்ளது. ஒருகட்டத்தில், அந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதியது. பாதசாரிகளான 30 வயதான பார்கவ் பட் மற்றும் 65 வயதான சாம்பாபென் வச்சானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்துடன் சாலையில் சறுக்கிய கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தின் டயர்கள் வெடித்தன. அதில் பயணித்த இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பல வாகனங்களும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, உயிரிழந்த பார்கவ் பட்டுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் முடிந்துள்ளது. மேலும் விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் உள்ளூர் குற்றப்பிரிவில் உதவி துணை ஆய்வாளர் (ASI) அனிருத்தா சிங் வஜுபா கோஹில் என்பவரின் மகன் ஹர்ஷ்ராஜ் சிங் கோஹில் (20) எனத் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.