ஹிந்தி மொழி பேசும் குஜராத் அல்லாத மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக உருவாகியிருக்கும் ‘கும்பல் தாக்குதல்’ என்ற விபரீதமான கலாச்சாரம் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வெவ்வேறு விதமான காரணங்களுக்காக சமீப காலங்களாக இத்தகையை கும்பல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இத்தகைய தாக்குதலில் தங்களையும் அறியாமல் அப்பாவி மக்களும் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவல்கள் மூலம் நடைபெற்ற தாக்குதலில் வயதான மூதாட்டி உள்பட பலர் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவங்கள் அப்போது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
சபர்கண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டதுதான் இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளி. கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அடுத்த நாளில் இருந்து, குஜராத்தில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து கும்பல் தாக்குதல் நடைபெற்றது.
உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த ஹிந்தி பேசும் மக்கள் இந்தத் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கும்பல் தாக்குதல் கட்டுப்பாடின்றி பல மாவட்டங்களிலும் மின்னல் வேகத்தில் பரவியது. இதனால், அச்சம் தொற்றிக் கொண்ட வெளிமாநில தொழிலாளர்கள், குஜராத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு அஞ்சி கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இவ்வாறு சுமார் 20 ஆயிரம் மக்களுக்கு மேல் ஒரு வாரத்தில் வெளியேறினர்.
குஜராத்திற்கு வேலைக்காக சென்ற தங்கள் மாநில மக்கள் வன்முறை காரணமாக திரும்பி வருவது குறித்து அண்டை மாநில அரசுகள் முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விஜய் ரூபானியை தொடர்புக் கொண்டு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று பேசியுள்ளார். அப்போது, “ஒருவர் குற்றம் செய்ததற்காக, மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. தவறு செய்த குற்றவாளியை தண்டிக்க வேண்டும். எல்லா மக்களையும் அல்ல” என்றார். அதேபோல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் போன் செய்து பேசியுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அப்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்டை மாநிலங்களில் அழுத்தம் வரும் நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முனைப்பில் குஜராத் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளியேறிய மற்ற மாநில மக்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என குஜராத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. குஜராத் மக்கள் யாரும் வன்முறை சம்பங்களில் ஈடுபட வேண்டாம் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக விஜய் ரூபானி கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் எவ்வித வன்முறையும் நடைபெறவில்லை. நிலைமை போலீசாரால் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உறுதி பூண்டியுள்ளோம். ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக போலீசாருக்கும் போன் செய்யலாம். நாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்போம்” என்றார்.
மற்ற மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா கூறினார். மேலும், “400 பேர் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 56 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.