இந்தியா

சிக்கிய ரூ.775 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் - உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி

JustinDurai

அடுத்தடுத்து போதைப்பொருட்கள் சிக்கி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து 775 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் என்ற போதைப்பொருளை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக குஜராத்துக்கு போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை கடத்திவந்த பாகிஸ்தானியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 27ஆம் தேதி டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் 4 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் டெல்லியைச் சேர்ந்த ராஜி ஹைதர் ஜைதி ஹெராயின் கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது.

ஜைதி சிறையில் இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம் முசாபர் நகரில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருந்து 155 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளை சிறப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச அளவில் அதன் மதிப்பு 775 கோடி ரூபாய் என்றும் கூறுகின்றனர். போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் 55 கிலோ ரசாயனப் பொருட்களும் சிக்கின. ராஜி ஹைதர் ஜைதி, கடலில் கைமாறும் ஹெராயினை நிலத்தில் இறக்கும் பணிகளை செய்து வந்ததாகவும் சிறப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாம்: தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை; சிக்கிய அஸ்ஸாம் இளைஞர்