இந்தியா

அனுமதியின்றி வெளியே சென்ற மாணவனுக்கு பிரம்படி தந்த டியூஷன் ஆசிரியர்-நடந்தது என்ன?

EllusamyKarthik

குஜராத் மாநிலத்தில் டியூஷன் ஆசிரியரின் அனுமதியின்றி வெளியே சென்ற மாணவனை சரமாரியாக ஆத்திரத்தில் தாக்கியுள்ளார் அந்த ஆசிரியர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியரிடம் பிரம்படி வாங்கிய மாணவனின் பெயர் நீலஷ் உனட்கட் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழன் அன்று நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் டியூஷனில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை முன்னிட்டு சிறப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சரியாக தேர்வு தொடங்க சமயம் பார்த்து மாணவன் நீலஷ், ஆசிரியரின் அனுமதியின்றி வெளியேறி உள்ளான். இயற்கை உபாதை காரணமாக வகுப்பை விட்டு நீலஷ் வெளியேறியுள்ளதாக தெரிகிறது. பின்னர் அவன் வகுப்புக்கு திரும்பிய போது ஆசிரியர் நீலஷை தாக்கியுள்ளார். 

அதை தொடர்ந்து வீட்டுக்கு சென்று நடந்ததை பெற்றோர்களிடம் விவரித்துள்ளான் அவன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு, இது குறித்து போலீசில் அவரது தரப்பில் புகாரும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது போலீசார் மாணவன் நீலஷின் வாக்குமூலத்தை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் குற்றம் செய்திருப்பது உறுதியானால் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் தேர்வை முன்னிட்டு நீலஷ் அந்த டியூஷனில் சேர்ந்துள்ளார். இதே போல சில தினங்களுக்கு முன்னர் நீலஷை ஆசிரியர் தாக்கியதாக தகவல்.