இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் - மத்திய அரசின் வழிமுறைகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் - மத்திய அரசின் வழிமுறைகள்

Sinekadhara

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்விற்கான வழிமுறைகளை மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் இறந்துவிடுவதால் குழந்தைகள் ஆதரவற்று தனித்து விடப்படுவதாக புகார்கள் எழுந்துவருகிறது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், பெற்றோரை இழந்து பராமரிக்க யாருமில்லாத குழந்தைகளை 24 மணிநேரத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. அவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள் என்றும் கூறியிருக்கிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க ‘1908’ என்ற இலவச தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து தெரிவித்தால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை சட்டப்பூர்வமாக மட்டுமே தத்தெடுக்கவேண்டும் எனவும், அதற்கான இணையதளத்தையும் மத்திய அரசு நேரடியாக வழங்கியிருக்கிறது. அதேபோல் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் இதுபோன்ற குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுடைய நலன் குறித்து குழந்தைகள் நலக்குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.