gst x page
இந்தியா

நடுத்தர வர்க்கத்தினருக்கு விரைவில் நிவாரணம்.. 12% ஜிஎஸ்டி பொருட்களைக் குறைக்க பரிசீலனை!

12 சதவீத ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்குவது அல்லது தற்போது 12 சதவீதமாக வரி விதிக்கப்படும் பல பொருட்களை 5 சதவீத கீழ் அடைப்புக்குறிக்குள் மறுவகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

நாடு முழுவதும் சீரான ஒரு வரி நடைமுறை இருக்க வேண்டும் என்பதற்காக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் 5%, 12%, 18%, 28% என்ற அளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 3% ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இந்த ஜிஎஸ்டி வரிமுறையில் குறிப்பிட்ட சில சேவைகளுக்கும் பொருட்களுக்குமான வரியைக் குறைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அது ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விரைவில் 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்திய நேர்காணலில், ஜிஎஸ்டி விகிதங்களில் சாத்தியமான மாற்றங்கள் இருக்கும் என அவர் சூசகமாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே, 12 சதவீத ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்குவது அல்லது தற்போது 12 சதவீதமாக வரி விதிக்கப்படும் பல பொருட்களை 5 சதவீத கீழ் அடைப்புக்குறிக்குள் மறுவகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

gst

இந்த மறுசீரமைப்பு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள், சமையலறை பாத்திரங்கள், மின்சார இரும்புகள், கீசர்கள், சிறிய கொள்ளளவு கொண்ட சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000க்கு மேல் விலையுள்ள ஆயத்த ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலையுள்ள காலணிகள், எழுதுபொருள் பொருட்கள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள் மற்றும் விவசாயக் கருவிகள் போன்ற பொருட்களை இலக்காகக் கொண்டிருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால், இவற்றில் பல பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எனவும், அதேநேரத்தில், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீது ரூ.40,000 கோடி முதல் ரூ.50,000 கோடி வரை சுமையை ஏற்படுத்தும் எனவும் அதை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் நுகர்வு அதிகரிக்கும் என்றும் குறைந்த விலையால் அதிக விற்பனை ஆகும் என்றும், இறுதியில் வரி அடிப்படை மற்றும் நீண்டகால ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்கும் என்றும் மையம் நம்புகிறது.

gst

மறுபுறம், இந்தியாவில் 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு பொதுவாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பொதுவான பயன்பாட்டிற்குரிய பொருட்களை உள்ளடக்கியது. ஆனால் அவை முழுமையான அத்தியாவசியப் பொருட்களாகத் தகுதி பெறாமல் போகலாம். அவை 0 சதவீதம் அல்லது 5 சதவீதம் வரி விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.