ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து இரண்டு வாரங்களாகியும் பல்வேறு நகரங்களில், பல்வேறு விலைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன.
ஜிஎஸ்டி அமலானபின், நாடு முழுவதும் அனைத்துப் பொருட்களும், ஒரே விலைக்கு விற்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பொருட்களின் விலைகளில் மாறுபாடு காணப்படுகிறது. தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்று சேகரித்த தகவல்களின்படி, 10 கிலோ எடை கொண்ட கோதுமை மாவு, சென்னையில் 339 ரூபாய்க்கும், திருவனந்தபுரத்தில் 440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
10 கிலோ எடை கொண்ட கோதுமை மாவு சென்னையில் 339 ரூபாய், அந்தமானில் 420 ரூபாய், திருவனந்தபுரத்தில் 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேசமயத்தில், பஞ்சாப்பில் 320 ரூபாய்க்கும், ஒடிஷாவில் 334 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஒரு கிலோ அயோடின் உப்பு சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரத்தில் 18 ரூபாய்க்கும், புவனேஷ்வரில் 17 ரூபாய்க்கும், அந்தமானில் 14 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதிகபட்சமாக ராய்ப்பூரில் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 500 மில்லி டெட்டாலின் விலை சென்னையில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொச்சியில் 150 ரூபாய்க்கும், புவனேஷ்வரில் 125 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஹைதராபாத், விஜயவாடாவில் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.