திருமணத்தின்போது தப்பியோடிய மணமகனை, மணமகள் பின்னாலேயே துரத்திச்சென்று பிடித்த விசித்திர சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக ஊடங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அந்த பெண் தனது பெற்றோருடன் சந்தைவெளிக்கு சென்றபோது, தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளையை பார்த்திருக்கிறார். அங்குவைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால் மாப்பிள்ளை பையன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதனைக்கண்ட மக்கள் அங்கு கூட்டம் கூடியுள்ளனர். இருப்பினும் அந்த கூட்டத்திற்கு நடுவில் புகுந்த அந்த பெண் மணமகனின் பின்னால் துரத்திச்சென்று அவரை இழுத்துப்பிடித்து ’’என்னை திருமணம் செய்துக்கோ’’ என்று கெஞ்சியிருக்கிறார்.
அந்த வீடியோவில் மாப்பிள்ளை பெண்ணின் பிடியிலிருந்து தன்னை மீட்க முற்படுகிறார். ஆனால் அந்த பெண் திரும்ப திரும்ப அவர் சட்டையை இழுத்து பிடித்து கெஞ்சுகிறார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தார் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்பே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக மாப்பிள்ளைக்கு பைக் மற்றும் ரூ.50,000 பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இருப்பினும் திருமண தேதி நெருங்கியபோது மணமகன் திருமணத் தேதியை தள்ளிபோட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி திருமணத்தையும் தள்ளிப்போட்டோம். இப்போது மணமகனின் குடும்பத்தார் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போகின்றனர் என்று கூறுகின்றனர்.
அந்த ஆண் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். பெண் மஹுலி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த செய்தி தீப்பொறி என பரவியதை அடுத்து போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு இரு குடும்பத்தாருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் இரு குடும்பத்தாரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து இருவருக்கும் கோவிலில் வைத்து போலீசார் திருமணத்தை நடத்திவைத்தனர்.