மணமேடையில் புகைப்படக்காரர் மாப்பிள்ளையை தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மணப்பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து மாப்பிள்ளையிடம் அடிவாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
திருமணத்தின்போது மாப்பிள்ளையைவிட மணப்பெண் தான் உடை, நகை, சிகை என அனைத்து அலங்காரங்களிலும் அழகாய் மேக்கப் போட்டு திருமணத்திற்கு வருபவர்களை ஈர்த்துக்கொண்டே இருப்பார். வாழ்த்த வருபவர்களும் பெண்ணின் உடை, நகைகளையே கவனித்து அதுகுறித்தே பேசுவார்கள். சிறிது நேரம் வந்து வாழ்த்திவிட்டு செல்பவர்களே இப்படியென்றால், ஆரம்பத்திலிருந்து மணப்பெண்ணை புகைப்படம் எடுக்கும் ரசனையுள்ள புகைப்படக்காரர்கள் எப்படி எடுப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்?
அப்படித்தான், சிகப்பு நிற உடையில் மணப்பெண் அழகாய் காட்சியளிக்க அருகில் நிற்கும் மணமகனை தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு மணப்பெண்ணை மட்டும் புகைப்படம் எடுக்கிறார் போட்டோக்காரர். அந்த மணமகனும் எவ்வளவு நேரம்தான் பொருத்துப் பொருத்துப் பார்ப்பார். புகைப்படக்காரர் மீது ஆத்திரத்தில் பொங்கி அடியாகக் கொடுத்துவிட்டார்.
இதனை எதிர்பார்க்காத புகைபடக்காரர் சிரித்துக்கொண்டே விலகிச்செல்ல, மணப்பெண் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த புகைப்படக்காரரின் பரிதாப நிலையும் கணவர் கோபப்பட்டதையும் பார்த்து சிரித்து சிரித்து கீழே விழுகிறார். சோகத்திலிருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.