இந்தியா

'மேகதாது திட்டத்துக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்குக' - பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

Veeramani

மேகதாது விவகாரத்தில் கர்நாடகம், தமிழகம் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே அனுமதி என்ற மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில், "மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கும் என காத்திருக்கும் கர்நாடகா மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் கருத்து இடம்பெற்று உள்ளது. தமிழகத்திற்கு உரிய நீர் பங்கை வழங்கியது போக மீதமுள்ள நீரை சேமித்து வைக்க கர்நாடக அரசுக்கு தார்மீக சட்ட ரீதியான உரிமை உண்டு. கர்நாடகாவின் காவிரி படுகையில் இருந்து தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 60-70 டிஎம்சி நீர் வீணாக செல்கிறது; அதனை நியாயமான முறையில் பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்படுத்தி போதிய குடிநீர் வழங்க முடியும்" என தெரிவித்துள்ளார்.



மேலும், "காவிரி விவகாரத்தை தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது. கர்நாடகாவில் காவிரி நீரை பயன்படுத்த கூடிய 12 மாவட்டங்களில் 3.5 கோடி மக்கள் உள்ளனர், ஆனால் இவர்களில் 30% பேருக்கு மட்டுமே காவிரி நீர் கிடைக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செய்து வரும் பெங்களூரு நகரம் நீர் பிரச்சனையால் பல்வேறு அழுத்தங்களை கொண்டுள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீருக்கான வறட்சி காணப்படுகிறது. அடுத்த 50 ஆண்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு சீராக நீர் வழங்க வேண்டும் என்றால் அதற்கு மேகதாது அணை மட்டுமே தீர்வு ஆகும்.



நீர்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களில் கர்நாடக மாநிலத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு அநீதி இழைப்பது புதிதல்ல. மேகதாது விவகாரம் தமிழகத்தில் பாஜக கையிலே எடுத்துள்ள அரசியல் கருவியாக உள்ளது. எட்டினஹோளே, அப்பர் பத்ரா, அப்பர் கிருஷ்ணா உள்ளிட்ட திட்ட பணிகள் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அமை வேகத்தில் நடந்து வருகிறது. நதிநீர் இணைப்பு திட்டம் என்பது கீழ்பாசன வசதி பெரும் தமிழகத்திற்கு மட்டுமே பயன்பெறும். எனவே மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து அனுமதிகளையும் விரைவில் வழங்கவும், நிலுவையில் உள்ள அனைத்து நீர் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கவும் வேண்டும்" என்று கர்நாடகா சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.