இந்தியா

“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி

rajakannan

ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளது. 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாக்குதல் நடந்த உடனே பாகிஸ்தானுக்கு வழங்கி இருந்த வர்த்தக ரீதியில் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. பின்னர், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்து வந்த உபரி நீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த நம்முடைய உபரி நீரை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எங்களது அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கு பகுதி நதிகளில் இருந்து உருவாகும் நதி நீரை, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தியாவின் உபரிநீரை திசை திருப்ப ஷாஷ்பூர்-காண்டி பகுதியில் ராவி நதியில் அணை கட்டும் பணி தொடங்கியுள்ளது. UJH மின் திட்டத்தின் மூலம் கிடைக்கும் உபரி நீரை, நதியை ஒட்டிய பகுதி மக்கள் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.