இந்தியா

‘வெளிநாடுகளிலிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி’ - ராம்விலாஸ் பாஸ்வான் ட்வீட்

webteam

வெங்காய விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ வெங்காயம் சந்தைகளில் நூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் பற்றாக்குறையே இந்த விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், சாமானிய மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள அவர், வெங்காயத்தை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைகளில் வரும் நவம்பர் ‌15 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை விற்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்