இந்தியா

கோதாவரி -காவிரி இணைப்புக்கு ரூ60 ஆயிரம் கோடியில் திட்டம் தயார்: நிதின் கட்கரி

கோதாவரி -காவிரி இணைப்புக்கு ரூ60 ஆயிரம் கோடியில் திட்டம் தயார்: நிதின் கட்கரி

webteam

தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி -காவிரி ஆறுகளை இணைப்பதற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மாநில தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 6 வது பட்டமளிப்பு விழா காரைக்கால் திருவேட்டக்குடியில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு 116 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாரயணசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மாணவர்கள் உருவாக்கிய, சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் உலர் தள கருவாடு இயந்திரத்தை காரைக்கால் மீனவர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார். அதன் பின்னர் மாணவர்கள் முன்னிலையில் நிதின்கட்கரி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “ நீரின் முக்கியத்துவத்தை பூர்த்தி செய்யவும் கடலில் வீணாகும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்கவும் கோதாவரியில் இருந்து கடைமடைக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பில் கிருஷ்ணா பெண்ணாறு வழியாக 1252 கிலோமீட்டரில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது.

மீத்தேன், எத்தனால், பையோ டீசல் ஆகியவைகளால் இயங்கும் 400 நவீன பேருந்துகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அரசுக்கு வருடத்திற்கு 60 கோடி ரூபாய் மிச்சமாகும்” எனக் கூறினார்.