இந்தியா

விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?

webteam

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

டெல்லி விவசாயிகளுடன், மத்திய அரசு ஏற்கெனவே 10 முறை நடத்திய பேச்சுவார்த்தைகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதாக 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை விவசாய சங்கங்கள் நிராகரித்தன. இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவது தொடர்பாக காவல் துறையினருக்கும் விவசாய அமைப்பினருக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

குடியரசு தினத்தன்று சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதால் டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணியை நடத்த விவசாய அமைப்பினரை காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் டெல்லிக்குள் உள்ள வெளிவட்ட சுற்றுச்சாலையில்தான் பேரணி நடத்துவோம் என்பதில் விவசாய அமைப்புகள் உறுதியாக இருந்தன. இதனால் முடிவு எதுவும் கிடைக்காத நிலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.