இந்தியா

ஓபிசி பட்டியல்: மாநிலங்களுக்கு திரும்புமா அதிகாரம்? - மத்திய அரசு பரிசீலனை

ஓபிசி பட்டியல்: மாநிலங்களுக்கு திரும்புமா அதிகாரம்? - மத்திய அரசு பரிசீலனை

webteam

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காணும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வழிவகை செய்யும் வகையில் அரசமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமூகநீதிக்கான மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளே பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளப்படுத்தி வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காணும் அதிகாரத்தை தேசிய பிற்டுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு வழங்கும் சட்டம், கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இது மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மத்திய அரசிடம் அதிகாரம் குவிய வழிவகை செய்யும் என அப்போதே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருந்தும் 102வது அரசமைப்பு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மாநிலங்களின் பிற்படுத்தப்பட்டோரை தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசே அறிவிக்கமுடியும் என உத்தரவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூகநீதிக்கான மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறையுடன் ஆலோசித்து வருவதாகவும், பிரதமரின் அலுவலக அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போதைய சூழலில் அரசமைப்பை திருத்துவது ஒன்றுதான் வழி எனக் கருதுவதாகவும் அவர் கூறினார். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரத்தை மாநில அரசுகள் வசமே தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டதிருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.