வரும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னோட்டமாக வெள்ளிகிழமை நடைபெறவுள்ள தொழுகைகளின்போது கட்டுப்பாடுகளை தளர்த்தி, அரசமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு மக்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை அறிய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழுகை மற்றும் பக்ரீத்தையொட்டி சில தளர்வுகள் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மொபைல் போன் சேவை, இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது எனக் கூறப்படுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பாக காஷ்மீரில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முகாமிட்டு பாதுகாப்புச் சூழலை கண்காணித்து வருகிறார். அப்போது அவர் உள்ளூர் மக்களிடம் உரையாடி அவர்களது கருத்துகளை கேட்டறிந்தார். காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் ஆங்காங்கே சில கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனினும், பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை.