இந்தியா

'சமையல் எண்ணெய் விலை உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது'- மத்திய அரசு தகவல்

நிவேதா ஜெகராஜா

சமையல் எண்ணெய்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றின் விலைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 21 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அனைத்து வகை சமையல் எண்ணெய்களும் கையிருப்பில் உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, உள்நாட்டில் சில்லறை விற்பனையில் விலையை குறைப்பது தொடர்பாக சமையல் எண்ணெய் பதப்படுத்தும் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளிவிவரங்கள் தொடர்பாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக இருந்தது. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவென்று சொல்லப்பட்டது. அதிலும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலை விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8% என மார்ச் மாதம் இருந்த நிலையில், அது ஏப்ரல் மாதம் இன்னும் உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது.