இந்தியா

புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழா: பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை

JustinDurai
புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றார். நீண்ட இழுபறிக்குப் பின்னர் என்.ஆர். காங்கிரஸுக்கு 3 அமைச்சர்களும், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் என அமைச்சர் பதவிகளுக்கான பங்கீடு முடிந்து, பெயர் பட்டியலை முதல்வர் ரங்கசாமி கடந்த 23-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி எளிமையாக நடைபெற்று வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜக சார்பில் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ சாய் ஜெ.சரவணக்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என சுமார் 100 பேர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.