supreme court
supreme court pt desk
இந்தியா

ஆளுநர் தனது அதிகாரத்தை சட்டப்படியும், அரசியல்சாசன விதிகளின்படி பயன்படுத்தவில்லை - உச்ச நீதிமன்றம்

நிரஞ்சன் குமார்

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை அரசியல் கட்சிகள் தங்கள் உள்கட்சி பூசலை சரி செய்யும் தளமாக பயன்படுத்தக்கூடாது என சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டு இருந்தால் அவர் முதல்வராக இருந்த நிலையை மீண்டும் கொண்டு வந்திருப்போம் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாகப் பிரிந்து பின்னர் பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநில அரசியல் குழப்பம் தொடங்கிய போது அதற்கு பிரதான காரணமாக இருந்த ஏக்நாத் ஷிண்டே உட்பட பதினாறு சட்டமன்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய மகாராஷ்டிரா மாநில சபாநாயகர் முடிவெடுத்து இதற்கான நோட்டீசையும் அனுப்பினார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சிவசேனா கட்சியையும் அதன் தேர்தல் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. ஏற்கெனவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது அவர் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இருக்கிறதா என்பது தொடர்பாக ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விற்கு அந்த ஒரு குறிப்பிட்ட விவகாரம் மாற்றப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது, மகாராஷ்டிரா ஆளுநர் ஏக்நாத் ஷிண்டே தரப்பை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது உள்ளிட்ட விவகாரங்களில் தனியாக தீர்ப்பு வழங்கியது.

உத்தவ் தாக்கரே

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவசேனா கட்சியின் ஆட்சி மன்ற குழு ஒருமனதாக உத்தவ் தாக்கரே வை கட்சித் தலைவராகவும் ஏக் நாத் ஷிண்டேவை குழு தலைவராகவும் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுத்தது. பிறகு இரண்டு குழுவாக இந்த கட்சி மாறியதற்கு பிறகு மகாராஷ்டிரா மாநில சபாநாயகர் 2022ஆம் ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி புதிய கொரடாவை நியமிக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் கொராடா நியமனம் என்பது மிகவும் முக்கியமானது. கொராடாவை நியமிப்பது என்பது அரசியல் கட்சியின் வேலை. ஆனால் இதனை கவனிக்காமல் சபாநாயகர் தனிக்குழுவாக செயல்படும் ஏக் நாத் ஷிண்டே தரப்பினர் முன்வைத்த நபரை கொராடாவாக நியமித்தார். இது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஒரு கட்சியிலிருந்து தனியாகப் பிரிந்து வந்த ஒரு குழு தாங்கள் தான் அதிகாரமிக்க குழு என சொல்லி தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியாது எனவும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

Uddhav Thackeray

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட போது எதிர்க்கட்சிகள் யாரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர முற்படவில்லை. அப்படி இருக்கும்பொழுது உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா நிலையை அடையவும் அதனை நிரூபிக்க அழைப்பு விடுக்கவும் மகாராஷ்டிரா ஆளுநரிடம் போதுமான காரணங்கள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தலைமை நீதிபதி கூறியதோடு நம்பிக்கை வாக்கெடுப்பை ஒரு கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி விவகாரங்களை சரி செய்வதற்கான விஷயமாக பயன்படுத்தக் கூடாது எனவும் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறினார்

உத்தவ் தாக்ரே எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று இல்லாத நிலையில் ஆளுநர் ஏக்ந்த் ஷிண்டே தரப்பின் கடிதத்தை நம்பி இருக்கக்கூடாது, நம்பிக்கை இல்லா தீர்மான விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தை சட்டப்படியும், அரசியல்சாசன விதிகளின்படி பயன்படுத்தவில்லை என அழுத்தமாக தீர்ப்பில் எழுதியுள்ளார்

மேலும் ஆளுநர் அரசியல் களத்துக்குள் சென்று, அரசியல் கட்சிகளின் உள் பிரச்சனை விவகாரத்தில் தலையிட அரசியல் சாசனமும், சட்டமும் வழிவகை செய்யவில்லை என ஆளுநர்களின் செயல்பாடு குறித்தும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

எனினும் பாஜகவுடன் கைகோர்த்து ஏக்நாத் சிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமலேயே உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், இந்த நீதிமன்றம் பழைய நிலையை மீட்டெடுத்திருக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

supreme court

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சபாநாயகர், ஆளுநர் ஆகியோரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமாக இருந்த போதும் உத்தவ் தாக்கரே ராஜினாமா என்ற முடிவை எடுத்ததால் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அரசு தப்பியுள்ளது