இந்தியா

அனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்

jagadeesh

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு சென்றல் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், சபரிமலை கோயில் புரட்சி செய்யும் இடமில்லை என்றும் தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் நேற்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர். 

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். இதனையடுத்து சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்ற நிலையே தொடர்கிறது.

இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 மாத காலம் தொடர்ந்து நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜை, வரும் ஞாயிறன்று தொடங்குகிறது. அப்போது சபரிமலை கோயிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் பெண்களும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்கள் வந்தால் அனுமதிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.