மக்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு கலருக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது, பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு முகவரி நீக்கப்படுவதாக பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது மூன்று விதமான கலர்களில் உள்ளது. மத்திய அரசின் அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறம் மற்றும் இதர மக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
நீல நிற பாஸ்போர்ட்களில் இரண்டு வகைகள் உள்ளது. நீல நிற பாஸ்போர்ட்களில் ஒருவகை வெளிநாடுகளில் பயணிகளின் சோதனைக்கு முக்கியமானது. மற்றொன்று அவசியம் இல்லை. தற்போது எமிகிரேசன் சோதனைக்கு பயன்படும் பாஸ்போர்ட்டின் நிறத்தை நீலத்தில் இருந்து ஆரஞ்சாக மாற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் பாஸ்போர்ட்டை முகவரி சான்றிற்காக எங்கும் பயன்படுத்த முடியாது. அதற்கான பக்கத்தை அரசு நீக்கிவிடுவதால் அப்பயன்பாட்டில் இருந்து பாஸ்போர்ட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.