model image google gemeni
இந்தியா

ரூ.2000க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனை.. கட்டணம் வசூலிக்க முடிவு? ஷாக் கொடுக்கும் மத்திய அரசு?

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

Prakash J

ரூ.2000-க்கும் மேற்பட்ட UPI பணப் பரிவர்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் நாடு முழுவதும் வைரலாகி வரும் நிலையில், அது யுபிஐ பயனாளர்களை அதிர்ச்சிடையச் செய்துள்ளது.

நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. நகரம் முதல் கிராமம் வரை யுபிஐ பரிவர்த்தனை செயல்பாட்டில் உள்ள நிலையில், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், ரூ.2000-க்கும் மேற்பட்ட யுபிஐ வணிக பணப் பரிவர்த்தனைகளுக்கு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பது பயனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுபிஐ பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில்தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம், எதிர்காலத்தில் தேர்வுசெய்யப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தக கட்டணம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தக் கட்டணமும் உடனடியாக விதிக்கப்படவில்லை என்றாலும், இதற்கான சட்டப்பூர்வமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, பொதுவாக வணிகர்களுக்குச் செய்யப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு 0.05% முதல் 0.07% வரை கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வழிகாட்டுதலின்படி, வணிக வகையைப் பொறுத்து இந்தக் கட்டணம் 0.5% முதல் 1.1% வரை மாறுபட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

model image

எனினும், ரூ.2,000-க்கும் அதிகமான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இக்கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, வணிகர்களை மட்டுமே சார்ந்தது. குறிப்பாக பெரிய அளவிலான வணிகர்களுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படுவதால் சாதாரண நுகர்வோருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு, எப்போதும்போல UPI பரிவர்த்தனைகள் முழுமையாக இலவசமாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.