இந்தியா

ஃப்ளூ டிக் சர்ச்சை-இறுதி எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசுக்கு எதிர்வினை ஆற்றுகிறதா ட்விட்டர்

webteam

சமூகவலைதளங்களுக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற தேவையான இந்திய அதிகாரியை ட்விட்டர் நிறுவனம் நியமிக்க வேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு நியமிக்காத பட்சத்தில் ட்விட்டர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்குமான முரண்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. அது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வராங்களாக ட்விட்டர், மத்திய அரசு இடையே வார்த்தை போர் கூட முற்றிக் கொண்டே வருகிறது. அதாவது ட்விட்டர் ஒருதலைபட்சமாக மத்திய அரசு க்கு எதிராக செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து டூல்கிட் மூலம் கொரோனா இரண்டாம் அலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை உருவாக்க சதி செய்வதாகவும் காட்டமாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுக்களை ட்விட்டர் தொடர்ந்து மறுத்து வந்தது.

முன்னதாக, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்து, புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவை குறைதீர்க்கும் அலுவலர்களை பணியில் அமர்த்தியுள்ளன. அனைத்து சமூக வலைதளங்களும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் இதுவரை குறைதீர்க்கும் அலுவலர்களை நியமிக்கவில்லை.

இந்நிலையில்தான், ட்விட்டர் நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்து மத்திய அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “ சமூகவலைதளங்களுக்கு இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதியவிதிகளை பின்பற்ற, தேவையான இந்திய அதிகாரியை நியமிப்பது தொடர்பாக உரிய விவரங்களை ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ட்விட்டர் நிறுவனம் பரிந்துரைத்த அதிகாரி இந்திய ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர் அல்ல. புதிய விதிகளுக்கு ட்விட்டர் உடனடியாக இணங்க வேண்டும். இதுவே உங்களுக்கான இறுதி அறிக்கை. இதிலிருந்து விலகும் பட்சத்தில் 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் 79 ஆம் பிரிவின் படி ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் விலக்கு திரும்ப பெறப்படும். மேலும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

புதிய விதிமுறைகள் பிரச்னை ஒரு பற்றி எரிய, மறுபுறம் இன்று ப்ளூ டிக் சர்ச்சை வெடித்துள்ளது. இன்று காலை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மீண்டும் ப்ளூ டிக் மீண்டும் சேர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

அதற்கு ட்விட்டர் தரப்பில் சில காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிர்வினை ஆற்றும் வகையிலே ட்விட்டர் செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.