இந்தியா

கவுரி லங்கேஷ் படுகொலை : தலைவர்கள் கண்டனம்

webteam

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை, நேற்று மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகா உட்பட தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கவுரி லங்கேஷின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா கூறியுள்ளார். மேலும் கவுரி லங்கேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

பத்திரிகையாளர்களுக்கு எதிரான அனைத்து வகையான தாக்குதலையும் கண்டிப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சாடியுள்ளார். இதுபோன்ற படுகொலைகளுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் வெகுண்டு எழ வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி ராஜா வலியுறுத்தியுள்ளார்.